முதல்வர் விஜய் இன்று ஆந்திரா பயணம்.. சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர், முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை!!
CM Vijay to Visit Vijayawada Today: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே நிலவும் முக்கிய நதிநீர் பங்கீடு விவகாரங்கள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று விஜயவாடா செல்கிறார். இச்சந்திப்பின் போது கிருஷ்ணா நதிநீர் பங்கீடு, நதிகள் இணைப்பு மற்றும் விஜயவாடா உட்சவ் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
சென்னை, அக்.13: தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே நெடுநாட்களாக நிலுவையில் உள்ள பல்வேறு நீர் மேலாண்மை மற்றும் நதிநீர் பங்கீடு சார்ந்த விவகாரங்கள் மீண்டும் அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், இரு மாநில நலன்களையும் கருத்தில் கொண்டு சுமூக தீர்வு காண்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் நடைபெறும் இச்சந்திப்பானது, இரு மாநில எல்லைப் பகுதி நீர் ஆதாரங்கள் மற்றும் கூட்டாட்சி உறவுகளை மேம்படுத்துவதில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் ஆந்திரப் பிரதேசத்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவென்பதால், அரசியல் மற்றும் செய்தி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை
இரு மாநில நீர் பங்கீடு, முக்கிய விவாதப் பொருட்கள்:
இன்றைய சந்திப்பின் போது, தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் சென்னை நகரின் குடிநீர் தேவைகளுக்காக ஆந்திர அரசு வழங்க வேண்டிய கிருஷ்ணா நதிநீரின் பங்கீடு குறித்து முதன்மையாக விவாதிக்கப்படவுள்ளது. நீர் நிலைகளில் உள்ள தற்போதைய நீர் இருப்பு, சென்னைக்குத் தண்ணீர் அனுப்புவதில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசவுள்ளனர். இதுமட்டுமன்றி, மத்திய அரசால் திட்டமிடப்பட்டு வரும் கோதாவரி – கிருஷ்ணா – காவேரி நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் ஆந்திர அரசு சார்பில் எல்லையோரப் பகுதிகளில் புதிதாகக் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணைகள் சார்ந்த தமிழ்நாடு அரசின் கவலைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பயணத்திட்டம்:
இன்றைய பயணத் திட்டத்தின்படி, முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து 2.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணியளவில் விஜயவாடா அருகே உள்ள கன்னவரம் விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கிருந்து 3.40 மணிக்கு நேராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குச் சென்று அவருடன் 5.30 மணி வரை முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இச்சந்திப்பின் போது ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பங்கேற்று விஜய்யைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் திரைத்துற பின்னணி கொண்ட தலைவர்கள் சந்திப்பது இரு மாநில அரசியலிலும் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது! – ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!
விஜயவாடா உட்சவ் 2.0 மற்றும் கலாச்சார நிகழ்வுகள்:
இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர், மாலையில் 5.45 மணிக்கு புகழ்பெற்ற இந்திரகீலாத்ரி மலைக்குச் சென்று கனகதுர்கா அம்மனை தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, 6.45 மணியளவில் ஆந்திர அரசு சார்பில் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வரும் ‘விஜயவாடா உட்சவ் 2.0’ மற்றும் தேசிய அளவிலான சரஸ் மேளா கலை நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளார். புன்னமி காட் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்வுகள், நாட்டுப்புற கலைப் நிகழ்ச்சிகள் மற்றும் இசை கச்சேரிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து அவர் பார்வையிடுகிறார். அம்மாநிலத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கலைக்குழுவினரின் பல்வேறு சிறப்புப் படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, இரவு விஜயவாடாவில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்னை திரும்பவுள்ளார்.