“வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்த கேரள கார்”.. துரத்திச் சென்று மடக்கிய பொதுமக்கள்.. கோவையில் பரபரப்பு!
Drunk Youth Crash Car: கோவையில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று பல வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கேரள இளைஞர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தப்பிக்க முயன்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, அக்.13: கோவை நீலாம்பூர் பகுதியில் மதுபோதையில் அதிவேகமாகக் காரை இயக்கிச் சென்ற ஐந்து இளைஞர்கள், வழியில் சென்ற பல்வேறு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளப் பதிவெண் கொண்ட அந்த காரை விரட்டிச் சென்ற பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, இருகூர் அடுத்த குளத்தூர் பகுதியில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து முற்றுகையிட்டனர். காரில் இருந்த மதுபோதை இளைஞர்களைக் கீழே இறக்கி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களைத் தப்பிக்க வைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.
மோதிவிட்டு தப்பியோடிய கேரள இளைஞர்கள்:
கோவை – கேரளா புறவழிச்சாலையான எல் அண்ட் டி (L&T) பைபாஸ் சாலையில் நீலாம்பூர் வழியாக கேரளப் பதிவெண் கொண்ட கார் ஒன்று சென்றுள்ளது. அந்த காரில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளனர். காரை அதீத வேகத்திலும் ஆபத்தான முறையிலும் இயக்கிய அந்த இளைஞர்கள், நீலாம்பூர் பகுதியில் அவ்வழியாகச் சென்ற பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனினும், வாகனங்களை நிறுத்தாமல் நிற்காமல் வேகமாகத் தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் உடனடியாகத் தங்கள் வாகனங்களில் அந்தக் காரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
