டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது! – ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!
Fake Currency : கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை, அக்டோபர் 11 : கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 பேர் கைது
கோவை பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள ‘கோவை லேக் வியூ கிளப்’ அருகே ’11 to 11′ என்ற டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு அக்டோபர் 10, 2026 நேற்று மாலை அங்கு வந்த சில வாலிபர்கள், டாஸ்மாக் பாரில் மதுபானங்களை வாங்கிக் கொண்டு அதற்கான பணமாக ரூ.500 தாள்களை பார் ஊழியர்களிடம் கொடுத்து உள்ளனர். அந்த நோட்டுகளை வாங்கிப் பார்த்த ஊழியர்களுக்கு அதன் மீது சந்தேகம் எழுந்தது. தீவிரமாக பரிசோதித்த போது, அவை அனைத்தும் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் என்பது அம்பலமானது. மேலும் அந்த வாலிபர்கள் பொதுமக்கள் இடையேயும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டு செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையும் படிக்க : சேலத்தில் துணிகரம்.. காவலாளியை கட்டிப்போட்டு ரூ. 14 கோடி வெள்ளி பொருள்கள் கொள்ளை.. வடமாநில கும்பல் கைவரிசையா?




இதுகுறித்து தகவலின் பேரில், கடைவீதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நின்றிருந்த வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பொதுமக்களிடையே புழக்கத்தில் விடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 372 எண்ணிக்கையிலான ரூ.500 கள்ள நோட்டுகள் மொத்த மதிப்பு ரூ.1,86,000 பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைதானவர்கள் கோவை கரும்புக்கடை பாத்திமா நகர் 2-வது வீதியைச் சேர்ந்த அஜ்மல்கான் மகன் அக்தர் பர்வேஷ் (வயது 21), கரும்புக்கடை திப்பு நகர் சம்சுல் மஹால் வீதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஆபிள் (20), செல்வபுரம் அமுல் நகரைச் சேர்ந்த அபுதாகிர் மகன் யஹ்யா இலியாஸ் என்கிற அகி ஹியாஸ் (19), தெற்கு உக்கடம் ராம்கார்த்தி நகர் சிட்டி பார்க் அருகில் உள்ள வீதியைச் சேர்ந்த அபுதாகிர் மகன் ஷாஹித் (19) மற்றும் தெற்கு உக்கடம் கோட்டை புதூரைச் சேர்ந்த ரஹமதுல்லா மகன் முகமது இர்பான் (18) என்பது தெரியவந்தது.
இதையும் படிக்க : பெண்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வாரந்தோறும் ‘சிங்கப்பெண்’ கடன் சிறப்பு முகாம்கள்.. முழு விவரம்!!
கைது செய்யப்பட்ட அக்தர் பர்வேஷ், ஆபிள், யஹ்யா இலியாஸ், ஷாஹித், முகமது இர்பான் ஆகிய 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகேஷ்குமார் என்பவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களுக்கு இந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது, இதன் பின்னணியில் உள்ள முக்கிய கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் பாரில் ரூ.1.86 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 5 பேர் பிடிபட்ட இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.