சேலத்தில் துணிகரம்.. காவலாளியை கட்டிப்போட்டு ரூ. 14 கோடி வெள்ளி பொருள்கள் கொள்ளை.. வடமாநில கும்பல் கைவரிசையா?
Salem Rs.14 Crore Silver Looted : சேலத்தில் குடோன் காவலாளியை கட்டிப்போட்டு ரூ. 14 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளி பொருள்களை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சினிமா நகர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வெள்ளி பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இங்கு, வெள்ளி கட்டிகள், வெள்ளி கொலுசுகள், வெள்ளி காப்புகள், அரைஞான் கொடி, மெட்டி ஆகிய வெள்ளி பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 11- ஆம் தேதி) காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் குடோனில் வெள்ளி பொருட்களை கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, குடோன் காவலாளியான வெங்கடேஷ் என்பவரை மர்ம நபர்கள் தாக்கி அங்கேயே கட்டி போட்டனர். தொடர்ந்து, குடோன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஸ்பிரே அடித்து மறைத்தனர்.
ரூ. 14 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளி கொள்ளை
பின்னர், குடோனின் கதவின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட வெள்ளி பொருள்களின் மதிப்பு ரூ. 14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், இந்த சம்பவம் குறித்து காவலாளி பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு வந்து இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
மேலும் படிக்க: சென்னை வந்த விமானத்தில் நடுவானில் திடீர் தீ விபத்து.. திக் திக் நொடிகள்.. அலறிய பயணிகள்.. நடந்தது என்ன?




சம்பவ இடத்தில் மோப்ப நாய் சோதனை- தடயங்கள் சேகரிப்பு
இந்த புகாரின் பேரில், சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ. ஜி. பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அத்துடன், குடோனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, சிசிடிவி கேமராக்களில் கொள்ளை கும்பல் ஸ்பிரே அடித்த நிலையில், அதில் ஏதேனும் உருவங்கள் பதிவாகி இருக்கின்றனவா என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கொள்ளையில ஈடுபட்டது வடமாநில கும்பலா
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: குடும்பமாக காரில் வந்து பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு.. தந்தை, மகள் உட்பட 4 பேர் கைது!!