குடும்பமாக காரில் வந்து பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு.. தந்தை, மகள் உட்பட 4 பேர் கைது!!
Series of Burglaries in Locked Houses: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்துத் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, கல்லூரி மாணவி மகள் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். குடும்பமாக காரில் வந்து பகலில் நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டிய இவர்களின் அதிர்ச்சிச் செயல் போலீசாரையே உலுக்கியுள்ளது.
தருமபுரி, அக்.12: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில் திருடர்கள் புதுப்புது யுகங்களைக் கையாண்டு காவல்துறையினருக்கே சவால்விட்டு வருவது தொடர்கிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் அமைத்த தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தந்தை, கல்லூரி மாணவி மகள் மற்றும் உறவினர்கள் அடங்கிய நால்வர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. குடும்பமாகச் சென்று இவர்கள் நடத்திய கைவரிசை அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு – போலீஸ் உட்பட 3 பேர் கைது… சென்னையில் பரபரப்பு
போலீசாரின் அதிரடி சோதனை:
காரிமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக வீடுகள் உடைக்கப்பட்டு நகை, பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சொகுசு கார் ஒன்று அந்தப் பகுதிகளில் நடமாடியதும், அதன் மூலமே கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரிமங்கலம் பகுதியில் வழக்கமான வாகனச் சோதரணையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். அந்தக் காரைச் சோதனையிட்ட காவல்துறைக்கு உள்ளே இருந்த பொருட்களைப் பார்த்து பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரின் உள்ளே சமையல் எரிவாயு சிலிண்டர், எரியூட்டும் அடுப்பு, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ஆகியவை இருந்தன. இதனால் சந்தேகம் வலுக்கவே, நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:
போலீசாரின் தீவிர விசாரணையில், காருக்குள் இருந்தவர்கள் தேன்கணிக்கோட்டை அருகே உள்ள ஜவலகிரியைச் சேர்ந்த ஆனந்தன், அவரது மகள் யசோதா, மகன் சந்தோஷ குமார் மற்றும் உறவினர் வெண்ணிலா என்பது தெரியவந்தது. இதில் பிடிபட்ட யசோதா பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பதும், இவர்களுடன் சேர்த்து குடும்பமாகவே இந்தத் திருட்டுச் செயலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காரிமங்கலம் அருகே சொட்டாண்ட அள்ளி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ள இந்தக் கும்பல், பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளைக் காரில் சென்று நோட்டமிட்டுள்ளனர். வீடுகளைப் புகைப்படம் எடுத்துத் திருடுவதற்குத் துல்லியமாகத் திட்டமிடும் அவர்கள், இரவு நேரங்களில் குடும்பமாகச் சென்று பூட்டை உடைத்து கைவரிசை காட்டி வந்துள்ளனர். மேலும், காருக்குள் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் அப்பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து சில மணி நேரங்களுக்கு முன்பு திருடப்பட்டவை என்பது அம்பலமானது.
இதையும் படிக்க: மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 60 சவரன் நகைகள் கொள்ளை.. திருடன் கிடைத்தும் கிடைக்காத நகைகள்!!..
பொருட்கள் மீட்பும் தொடர் நடவடிக்கையும்:
கைது செய்யப்பட்ட இந்த நால்வரிடமிருந்தும் ஒன்றரை சவரன் தங்கநகை, ரூ.40,000 ரொக்கப்பணம், தொலைக்காட்சிப் பெட்டி, சமையல் எரிவாயு சிலிண்டர், குத்து விளக்குகள் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, சிக்கியுள்ள இந்தத் திருட்டுக் கும்பல் தற்போதைய திருட்டுடன் நிறுத்தாமல், மேலும் ஐந்து வீடுகளில் கைவரிசை காட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பமாகச் சென்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சொகுசு காரில் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன், கல்லூரி மாணவி மகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தர்மபுரி மாவட்டப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.