AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு – போலீஸ் உட்பட 3 பேர் கைது… சென்னையில் பரபரப்பு

Two Wheeler Theft Case : சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில், காவலர் ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட காவலர் முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு – போலீஸ் உட்பட 3 பேர் கைது… சென்னையில் பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 21:51 PM IST

சென்னை, அக்டோபர் 11 : சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில், காவலர் ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான காவலர், முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கைதான காவலர் வேல்முருகனைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் துரைப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2026 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவற்றில் சில பைக்குகள் அடுத்தடுத்து காணாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காவல் நிலையத்துக்குள்ளேயே நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து காவல்நிலையத்தில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க : ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம்: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்துக்கு வந்த 3 பேர், அங்கிருந்த 6 இருசக்கர வாகனங்களை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது கண்காணிப்பில் இருந்த போலீசார் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தத் திருட்டுகளுக்குப் பின்னணியில் அதே காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய காவலர் வேல்முருகன் இருப்பது தெரியவந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். முதல்நிலைக் காவலரான வேல்முருகன், தற்போது அடையாறு காவல் நிலையப் பணிப் பிரிவின் கீழ், நீலாங்கரையில் உள்ள முதல்வர் இல்லப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருவதும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட காவலர வேல்முருகனைத் துரைப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவருடன், துரைப்பாக்கம் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வரும் முத்துப்பாண்டி, அவரது கடை ஊழியர் ஜாகிர் உசேன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

காவலர் வேல்முருகனுக்குப் பணநெருக்கடி இருந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களையே திருடி, சென்னை புதுப்பேட்டையில் விற்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் போலீசார் கூறுகின்றனர். இவ்வாறு திருடப்பட்ட வாகனங்களை விற்றதன் மூலம் ஆகஸ்ட் மாதம் ரூ.16,000மும், செப்டம்பர் மாதம் ரூ.18,000மும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather report: நாளை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

இதனையடுத்து வாகனத் திருட்டு வழக்கில் கைதான காவலர் வேல்முருகனைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுவரை எத்தனை வாகனங்கள் திருடப்பட்டு விற்கப்பட்டன, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல் காக்க வேண்டிய போலீஸே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் அவர் தமிழக முதல்வர் இல்ல பாதுகாப்பு பிரிவிவல் பணியாற்றி வருவதும் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us