“டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!”.. சேலம் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு வளையத்தில் மேட்டூர்!!
CM Vijay to Visit Salem: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குச் சம்பா சாகுபடிக்காக நீர் திறக்கத் தமிழக முதல்வர் விஜய் சேலம் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஒட்டி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் தீவிரப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், ஆகஸ்ட் 26: காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசன தேவைகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் சேலம் மாவட்டத்திற்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி மேட்டூர் அணை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
அதிகாரிகள் நேரில் ஆய்வு:
முதல்வர் வருகை மற்றும் பாசன நீர் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, கோவை மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் ஆர்.கே.ரம்யா பாரதி தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் டிஐஜி சந்தோஷ் ஹதிமானி, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) குத்தாலிங்கம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தண்ணீர் திறக்கப்படும் முதன்மைப் பகுதிகள், முதல்வர் மற்றும் அதிகாரிகள் வந்து செல்லும் பாதைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளும் இடங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
அணை மதகுகளை திறந்து வைக்கிறார்:
காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி ஏற்கனவே போதிய நீரின்றிப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் விஜய் நேரடியாக மேட்டூர் வருகை தந்து அணை மதகுகளைத் திறந்து வைக்க இருப்பதை ஒட்டிப் பாதுகாப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து இன்னும் இறுதியாக வெளியிடப்படவில்லை என்ற தகவலும் நிலவுகிறது.
இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..
தாமதமாக திறக்கப்படும் நீர்:
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு சுமார் 51 டி.எம்.சி-யாக மட்டுமே உள்ள நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற 200 டி.எம்.சி-க்கும் அதிகமான நீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய உரியப் பங்கு நீர் நிலுவையில் இருப்பதால், தற்போதைய இருப்பைக் கொண்டு பாசன தேவைகளைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேட்டூர் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 61 முறை தாமதமாக நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை 62-வது முறையாகத் தாமதமாக நீர் திறக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள காவிரியின் உரிய நீரைப் பெற்றுத் தந்தால் மட்டுமே சம்பா சாகுபடியையாவது தடையின்றி மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கும் டெல்டா விவசாயிகள், முதல்வரின் இந்தச் சேலம் வருகையை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.