மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பயணத்திட்டம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த மாத இறுதியில் 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 13, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், மே 10ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்:
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், அன்று பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்திய அவர், பின்னர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்ற அவரை உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார்.
மேலும் படிக்க: தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?
பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
முதல்வர் விஜய், நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். முதல்வர் விஜய் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது என பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்:
இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த மாத இறுதியில் 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.