மே 13, 2026: தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. இதில் எத்தனை பேர் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் தொடருவாரா என்பது தீர்மானிக்கப்படும். நடைபெற்று முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து மூன்று முறை ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த தவெக:
ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. நான்காவது முறையாக, கடைசியில் 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து ஆளுநரை சந்தித்த நிலையில், அவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால், இரண்டு வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆளுநர் ஏற்காமல், வரும் மே 13ஆம் தேதி, அதாவது இன்று, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 106ஆக் குறைந்தது:
மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற பின்னர், மே 11ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பலம் 108 இலிருந்து 106 ஆக குறைந்துள்ளது.
அதாவது, முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பலம் 106 ஆக குறைந்துள்ளது.
அதே சமயம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், சட்டசபையில் தமிழக வெற்றிக்கழக கூட்டணியின் பலம் 119 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் போதுமானது என்பதால், தற்போதைய சூழலில் அரசுக்கு தேவையான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு:
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தால்தான் முதலமைச்சராக விஜய் தொடர முடியும்.
தமிழக சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிய உள்ளார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் வாக்கெடுப்பை நடத்துவார்.
மேலும் படிக்க: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி? விதிகளும், நடைமுறைகளும்.. முழு விவரம்!!
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் உள்ள அனைத்து கதவுகளும் மூடப்படும். மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரிபாதிக்கும் மேலாக ஒரு வாக்கு கூடுதலாக கிடைத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
முதல்வராக விஜய் தொடர்வாரா?
தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பிரிந்த அதிமுகவைச் சேர்ந்த 30 உறுப்பினர்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டவுடன், அதன் தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.