நேபாள பேரிடர் மீட்பு பணிகள்: டெல்லிக்கு விரையும் 4 அமைச்சர்கள்.. முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு..
மத்திய அரசுடன் இணைந்து நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக நான்கு அமைச்சர்களை டெல்லிக்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்கள் டெல்லி சென்று பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
ஆகஸ்ட் 27, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்:
இந்தக் கூட்டத்தில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது மற்றும் அவர்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தின் டெல்லி பிரதிநிதி ஆஷிஷ் குமார், ஐ.ஏ.எஸ்., தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவை நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு, நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க உள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை முதல் குமரி வரை 8 வழிச்சாலை.. ரூ. 2 லட்சம் கோடி மதீப்பீட்டில் சாலை திட்டங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்:
அதேபோல், மத்திய அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக நான்கு அமைச்சர்களை டெல்லிக்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்கள் டெல்லி சென்று பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
மீட்கப்பட்ட தமிழர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்நாட்டிற்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பேரிடரில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை ஆழ்வார்பேட்டையில் நவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்.. தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..
நேபாள அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து, அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.