AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை முதல் குமரி வரை 8 வழிச்சாலை.. ரூ. 2 லட்சம் கோடி மதீப்பீட்டில் சாலை திட்டங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

வரும் 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சென்னை முதல் குமரி வரை 8 வழிச்சாலை.. ரூ. 2 லட்சம் கோடி மதீப்பீட்டில் சாலை திட்டங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Aug 2026 11:22 AM IST

ஆகஸ்ட் 27, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுவரை 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. மேலும், இன்று முதல் கேள்வி நேரமும் எடுத்துக்கொள்ளப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்:

இன்றைய பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாகத் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே கிராசிங்குகள் உள்ள சில இடங்களில் மேம்பாலங்கள் இல்லாத நிலை உள்ளதாகவும், அவற்றைக் கண்டறிந்து ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை.. இல்லையென்றால் வலுவான போராட்டம்.. ஆட்டோ – டாக்சி சங்கம் அறிவிப்பு!

குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது முதற்கட்ட பணியாக மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் ரிங் ரோடு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை:

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகத் தெரிவித்தார். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதாகவும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். கிடப்பில் உள்ள உயர்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சென்னை முதல் குமரி வரை 8 வழிச்சாலை:

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன?

சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவது அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார். திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வருவதற்கு நான்கு மணி நேரம் ஆகும் நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை வருவதற்கே மூன்று மணி நேரம் ஆவதாகவும், திருவள்ளூரில் இருந்து சென்னை வருவதற்கும் சுமார் மூன்று மணி நேரம் ஆகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரூ. 2 லட்சம் கோடி மதீப்பீட்டில் சாலை திட்டங்கள்:

மேலும், மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறச் சாலைகள் விரிவாக மேம்படுத்தப்படும் என்றும், இதுதொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வரும் சாலைத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்தும், தமிழ்நாட்டுக்குத் தேவையான புதிய சாலைத் திட்டங்கள் குறித்தும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், வரும் 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Follow Us