முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணையில் என்ன நடந்தது?.. நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன?
இரு தரப்பிலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள 'வக்காலத்து' ஆவணத்தை, அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் நகல் ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சங்கீதா தரப்பிலும் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, ஜுன் 15: தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு விசாரணை, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகாத காரணத்தினால், இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. வடமாநில இளைஞர் கைது.. கும்மிடிப்பூண்டி அருகே கொடூரம்!
நீதிமன்றத்தின் புதிய நடைமுறைகள்:
இந்த வழக்கை விசாரித்து வந்த முந்தைய நீதிபதிக்கு (சசிகலா) பதிலாக, தற்பொழுது புதிய நீதிபதியாக சுஜாதா பொறுப்பேற்றுள்ளார். இதனால், வழக்கை தான் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கறிஞர்களுக்குச் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
ஈமெயில் மூலம் வக்காலத்து:
இரு தரப்பிலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘வக்காலத்து’ ஆவணத்தை, அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் நகல் ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சங்கீதா தரப்பிலும் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப முடிவு:
இந்த வக்காலத்து நடைமுறைகள் முடிந்த பிறகு, இரு தரப்பையும் சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். முந்தைய விசாரணையின் போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வாய்மொழியாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய புதிய நீதிபதி, வக்காலத்து ஆவணங்களை முழுமையாகத் தாக்கல் செய்த பிறகு, அடுத்தகட்டமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கான மனுவை முறைப்படி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர் கோரிக்கை நிராகரிப்பு:
வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிவைப்பதாக நீதிபதி அறிவித்த போது, முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞர், “அவ்வளவு நாட்கள் தள்ளி வைக்க வேண்டாம்; முடிந்தவரை விரைவாகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், நீதிமன்ற நடைமுறைகளைக் குறிப்பிட்டு அதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
அன்றைய தினம் (ஆகஸ்ட் 7) இரு தரப்பினரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.