AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விடுதிகளில் தோசை, சப்பாத்தி, காபி, டீ உள்ளிட்ட சில பொருட்கள் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் டீ மற்றும் காபியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பார்சல் டீ மற்றும் காபி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Mar 2026 15:38 PM IST

சென்னை, மார்ச் 12, 2026: போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக இருந்து வருகிறது. அதாவது, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரக்கூடிய சூழலில், ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு:

அதேபோல், கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது கிட்டத்தட்ட 100 அமெரிக்க டாலருக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, வீட்டு உபயோக எரிவாயு புக்கிங் தற்போது பெரிய நிறுவனங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வணிக எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

பெட்ரோல் பங்கில் அலைமோதும் கூட்டம்:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விடுதிகளில் தோசை, சப்பாத்தி, காபி, டீ உள்ளிட்ட சில பொருட்கள் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் டீ மற்றும் காபியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பார்சல் டீ மற்றும் காபி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்க: வீட்டு சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை!!

அதேபோல், டீக்கடைகளில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட தின்பண்டங்கள் கிடையாது என பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

இதற்கிடையில், பெட்ரோல் பங்குகளில் ஏராளமான மக்கள் குவிந்து தங்கள் வாகனங்களுக்கு டேங்க் ஃபுல் செய்து வருகின்றனர். சிலர் பாட்டில்களிலும் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பிச் செல்கின்றனர். இந்த சூழல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மக்கள் அச்சப்பட வேண்டாம்:

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ஆர். சக்கரபாணி அவர்கள் தலைமையில் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.

இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாக கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

Follow Us