சபரிமலை தங்கம் மாயமான வழக்கு…தமிழக தொழிலதிபருக்கு தொடர்பு இல்லை…நீதிமன்றத்தில் எஸ்ஐடி குழு!
Sabarimala Gold Theft Case: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் மணிக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இதற்காக அவருக்கு க்ளீன் சிட் வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கம் மாயமான வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் மணிக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், தொழிலதிபர் மணியை திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு வரவழைத்து இருமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதே போல, தமிழகத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள அலுவலகங்களில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டிருந்தது. மணியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உன்னிகிருஷ்ணன் பாட்டியை தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.
முக்கிய குற்றவாளியின் பாட்டியுடன் தொடர்பு
ஆனால், தங்கம் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளி என உன்னி கிருஷ்ணன் பாட்டியுடன், மணிக்கு தொடர்ந்து இருப்பதை நிரூபிப்பதற்கான எந்த வித ஆதாரமும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையில், சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் மணிக்கு தொடர்பு இல்லை என்று கிளீன் சிட் வழங்கியுள்ளது.
மேலும் படிக்க: சபரிமலையில் ரூ.1.60 கோடி அரவணைகள் வீண்..ரூ.16 லட்சம் நெய் பாக்கெட்டுகள் மாயம்…தொடரும் சர்ச்சை!
தங்க மாயமான வழக்கில் தொடர்பு இல்லை
மேலும், தொழிலதிபர் மனைவியிடமிருந்து சந்தேகத்துக்கிடமான எந்த ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத என்னை யாரேனும் பழிவாங்க நினைத்தால் தற்கொலை செய்து கொள்வதாக செய்தியாளர்களிடம் தொழிலதிபர் மணி தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தை மையமாக கொண்டு நடைபெற்ற விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் காரிய குழு உறுப்பினர் ரமேஷ் சென்னிதலாவுடன் பேசிய ஒரு தொழிலதிபர் மூலம் மணி மற்றும் சிலை கடத்தல் கும்பல் பற்றிய தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையானது தமிழ்நாட்டை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது. சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச தொல்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
பஞ்சலோக சுவாமி சிலைகள்
சபரிமலையில் பஞ்சலோக சுவாமி சிலைகளை தமிழக தொழிலதிபர் மணி வாங்கியதாக வெளிநாட்டு தொழிலதிபர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஒருவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டிருந்தது.
மேலும் படிக்க: மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!



