சபரிமலையில் ரூ.1.60 கோடி அரவணைகள் வீண்..ரூ.16 லட்சம் நெய் பாக்கெட்டுகள் மாயம்…தொடரும் சர்ச்சை!
Aravana Prasadam Wasted At Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமானதை தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது, ரூ.1.60 கோடி மதிப்பிலான அரவணை பிரசாதம் வீணாகி உள்ளது. ரூ.16 லட்சம் மதிப்பிலான நெய் பாக்கெட்டுகள் மாயமாகி உள்ளன. இது தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம், பத்தினம் திட்டா பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அதன்படி, தற்போது ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணை பிரசாதம் தட்டுப்பாடாக இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதில், ஆரம்பத்தில் பக்தர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வந்த அரவணைகள், பின்னர் 20 டின்களாகவும், பின்னர் 10 டின்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும், இந்த கட்டுப்பாடுகள் தொடரந்து வருவதாக கூறப்படுகிறது.
ரூ.1.60 கோடி மதிப்பிலான அரவணை வீண்
இதனிடையே, மகர விளக்கு சீசனில் தயார் செய்யப்பட்ட 1.60 லட்சம் டின் அரவணை கெட்டுப் போய் விட்டதாக கூறப்படுகிறது. இதில், போதிய அளவைவிட சர்க்கரை அளவு கூடியதாகவும், தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாகவும் அரவணை கெட்டுப் போய் இருக்கலாம் என்று அரவணை தயாரிக்கும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கெட்டுப்போன அரவணையின் மதிப்பு சுமார் ரூ.1.60 கோடி ஆகும்.
மேலும் படிக்க: ‘1,000 ஆண்டுகள்’.. தாக்குதல்களையும் தாண்டி நிலைத்து நிற்கும் சோமநாதர் கோயில்.. பிரதமர் மோடி பகிர்ந்த நினைவுகள்..
அரவணை விவகாரம் தொடர்பாக விசாரணை
இந்த அரவணைகளை பயன்படுத்த வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மேலும், அரவணை தயாரிப்பில் ஏற்பட்ட கவன குறைவு காரணமாக விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, சபரிமலை சன்னிதானத்தின் கீழ் பகுதியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவுண்டரில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை அளித்துவிட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய்யை பிரசாதமாக வாங்கிச் செல்லும் வசதி உள்ளது.
ரூ.16 லட்சம் மதிப்பிலான நெய் பாக்கெட்டுகள் மாயம்
இந்த நிலையில், இந்த கவுண்டரில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான 100 கிராம் எடையிலான 16 ஆயிரம் நெய் பாக்கெட்டுகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சபரிமலை கோயிலின் செயல் அலுவலர் பிஜு அளித்த புகாரின் அடிப்படையில், விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், ஒரு பூசாரி மற்றும் கோயிலில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை தங்கம் மாயமானதை தொடர்ந்து..
ஏற்கனவே, சபரிமலையில் உள்ள தங்க தகடுகள் புதுப்பிக்கும் பணிக்காக கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் உள்ள கிலோ கணக்கிலான தங்கம் மாயமாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தற்போது, அரவணை பிரசாதம் கெட்டுப்போன விவகாரம், நெய் பாக்கெட்டுகள் காணாமல் போன விவரம் பூதாகரமாகி உள்ளது.
மேலும் படிக்க: எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!



