வளைவில் திரும்பிய பேருந்து… தவறி விழுந்த மாணவர்.. தேர்வெழுத சென்றபோது பரிதாபம்!
Pudukkottai Crime: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் பயணித்த போது, அதில் இருந்து தவறி விழுந்து 10- ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்னர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வ. உ. சி நகரை சேர்ந்தவர் அழகர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி மற்றும் புவியரசு ( 15 வயது ) என்ற மகன் உள்ளனர். புவியரசு வேங்கடாகுளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், தனது வீட்டிலிருந்து பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமாகும். அதன்படி, இன்று தொடங்கிய 10- ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பதற்காக தனது பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு புவியரசு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அவர், ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அதிகளவு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதனால், பேருந்தில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.
வளைவில் பேருந்து திரும்பியபோது தவறி விழுந்த மாணவர்
இதன் காரணமாக மாணவர் புவியரசு பேருந்தின் முன் பக்க படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்தானது ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரம்- குப்பகுடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த வளைவில் பேருந்து திரும்பியது. அப்போது, மாணவர் புவியரசு எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், புவியரசுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.
மேலும் படிக்க: “மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது கோடைக்காலம்”.. இந்த ஆண்டு கொளுத்தப்போகுது வெயில்..




பரிதாபமாக பிரிந்த மாணவரின் உயிர்
உடனே பேருந்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே புவியரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேர்வு எழுத செல்வதாக தங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு பள்ளிக்கு சென்ற தங்களது மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் அவர்கள் மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதைத் தொடர்ந்து, அவரது உடல் உடல்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தனியார் பேருந்தின் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து புவியரசின் தந்தை அழகர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை பறிமுதல் செய்ததுடன், அந்த பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுத சென்ற மாணவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இன்றி அந்த பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ரயில்களில் அட்டகாசம் செய்யும் எலிகள்.. ‘பொறி’ வைத்து பிடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை..