AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை..

Children's Day Celebration: இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமையாக வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை ஒருநாள் முன்னதாகவே நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று நவம்பர் 13ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2026 07:36 AM IST

நவம்பர் 13, 2026: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு இன்று (நவம்பர் 13) கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காகத் தமிழக அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு கொண்டிருந்த அன்பையும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமையாக வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை ஒருநாள் முன்னதாகவே நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று நவம்பர் 13ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக்

இதுதொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 61,84,566 மாணவர்களுக்குக் கேக்குகள் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் புதிய திருப்பம்: முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

தரமான கேக்குகள் கொள்முதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் நான்கு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரத்திலான கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளின் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்குப் பிறகு, கேக்குகள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “சென்னையில் 12 புதிய ‘மினி தாலுகா’ அலுவலகங்கள்!”.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் விஜய்!!

அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

கேக்குகள் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள் மற்றும் பள்ளி வளாகங்களில் எலிகள், பூச்சிகள் உள்ளிட்டவை இல்லாத வகையில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கேக்குகள் முறையாக வழங்கப்படுவதைக் கண்காணிக்க உள்ளனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய்யும் மாணவர்களுக்குக் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Follow Us