ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் புதிய திருப்பம்: முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
Gem Veeramani Case: வீரமணி மீதான புகார்களை முறையாகக் கையாளவில்லை என்றும், புகார் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாகவும் கூறி முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், முன்னாள் கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 13, 2026: சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி வழக்கில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, வீரமணிக்கு எதிரான முதல் போக்சோ வழக்கில் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார்
சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அவர்களைச் சென்னைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிங், உதவியாளர் கணேசன், மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!”.. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!!
இதுவரை வீரமணி மீது 7 போக்சோ வழக்குகள் உட்பட மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கை மூடி மறைக்க முயற்சியா?
வீரமணி மீதான புகார்கள் தொடர்பாக ஆரம்பகட்டத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகார்களை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டதாகவும், புகார்களைச் சரியாக விசாரிக்காமல் வழக்கைக் கைவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 2026இல் காவல்துறை தரப்பில் வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்?
இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குநரால் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது தாய்மார்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் புதிதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 7 வழக்குகளும் 9 சிறுமிகள் தொடர்புடையவை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, 14 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 27ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது வழக்கு
இதற்கிடையே, வீரமணி மீதான புகார்களை முறையாகக் கையாளவில்லை என்றும், புகார் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாகவும் கூறி முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், முன்னாள் கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யத் தவறியது, சட்டப்பூர்வ உத்தரவுகளை மீறியது, தவறான ஆதாரங்களை உருவாக்கியது மற்றும் சாட்சியங்களை மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 720 பக்கங்கள் கொண்ட வீரமணிக்கு எதிரான முதல் குற்றப்பத்திரிகையில் வீரமணி மற்றும் அவரது இரண்டு ஓட்டுநர்களின் பெயர்களே இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் தொடர்பான விசாரணை தனியாக மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.