குப்பை கொட்டியதில் தகராறு… கிரிக்கெட் மட்டையால் தாக்கி காரை ஏற்றி கொல்ல முயற்சி! காலில் நரம்பு துண்டிப்பு!
Chennai Crime : சென்னை வேளச்சேரியில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி காரை ஏற்றி கொலை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், அவருக்கு காலில் நரம்பு துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை வேளச்சேரி நடேசன் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சங்கீதா. இவரது குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராபர்ட் என்பவரது குடும்பத்துக்கும் கார் நிறுத்துவது தொடர்பாகவும், குப்பைகளை கொட்டுவது தொடர்பாகவும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டின் முன்பு ராபர்ட் கார் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அவரது வீட்டின் முன்பு ராபர்ட் குடும்பத்தினர் குப்பை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாண்டியன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ராபர்ட் குடும்பத்தினரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதில், இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ராபட்டின் மருமகன் ஆத்திரமடைந்து கிரிக்கெட் பேட்டால் பாண்டியனை சரமாரியாக தாக்கினார்.
கிரிக்கெட் மட்டையால் தாக்கி கார் ஏற்றி கொல்ல முயற்சி
இதில், பாண்டியனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதுடன், அங்கேயே கீழே விழுந்தார். உடனே, அவரது மனைவி சங்கீதா போலீசாருக்கு புகார் அளிப்பதற்காக வீட்டின் உள்ளே செல்போனை எடுப்பதற்காக சென்றார். அப்போது, ராபர்ட் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் காரில் தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாண்டியன், அவர்களை தப்பி செல்ல விடாமல் காரின் முன்னால் மறைத்துக் கொண்டு நின்றார். அப்போது, அவர் மீது ராபர்ட் மருமகன் காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
மேலும் படிக்க: Madurai South Constituency Election 2026: அதிமுக vs திமுக.. மதுரை தெற்கு தொகுதி யாருக்கு சாதகம்?
கால் நரம்பு துண்டித்து மருத்துவமனையில் அனுமதி
இதில், பாண்டியன் கால் மீது காரின் டயர் ஏறி இறங்கியதில். அவரது காலில் நரம்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. உடனே, பாண்டியன் குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் மனைவி சங்கீதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்தும் தற்போது வரை சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று தெரிகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சி
இதனிடையே, சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதனால், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாண்டியன் மனைவி சங்கீதா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இந்த சம்பவத்தில் பாண்டியன் மீது ராபர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்குவதும், அவர் மீது காரை ஏற்றி சென்றது ஆகிய சம்பவங்கள் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.