பொளக்கும் வெயில்.. சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. அவதியில் மக்கள்..
வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகரித்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. அந்த வகையில், சுமார் 3.3 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை, லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
மே 21, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கொளுத்தும் வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை:
அதனைத் தொடர்ந்து வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ், கடலூரில் 38 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ், தொண்டியில் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் தூத்துக்குடியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், அடுத்த சில நாட்களில் இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வட கடலோர தமிழகத்தில் அசௌகரியமான வானிலை நிலவக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகரித்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. அந்த வகையில், சுமார் 3.3 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை, லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக மே 21ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
மே 22ஆம் தேதியைப் பொருத்தவரையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், மே 23ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 26ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.