நீலகிரி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மழை..
ஆகஸ்ட் 13ஆம் தேதி நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12, 2026: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நல்ல மழை பதிவாகி வந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
100 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை:
தொடர்ந்து பாளையங்கோட்டையில் 39.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 38.1 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.2 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரையில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வட உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுதந்திர தினம்- வார இறுதி லீவுக்கு ஈசியா ஊருக்கு போகலாம்.. அதிரடி பிளான் போட்ட தமிழக அரசு!
நீலகிரி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை:
இதனிடையே, ஆகஸ்ட் 13ஆம் தேதி நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?
ஆகஸ்ட் 15ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.