ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை தொடரும் மழை.. உயரும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட் என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10, 2026: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழக மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை தொடரும் மழை:
ஆகஸ்ட் 11ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “ஜெயலலிதா செஞ்ச மாதிரி செய்ய தைரியம் இருக்கா?”.. இபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!!
ஆகஸ்ட் 14ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட உள் தமிழகத்தில் உயரும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், வட உள் தமிழகத்தில் சற்று உயர்வாக வெப்பநிலை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.