சென்னையில் பைக் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர்.. கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்..
விசாரணையில், எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22), எண்ணூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) மற்றும் திருவொற்றியூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த தினேஷ் பாபு (18) ஆகியோர் இந்த சாகசத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 8, 2026: சென்னை எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக ரேஸ் ஓட்டி சாகசம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 3 இளைஞர்களை எண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் உள்ள விரைவு சாலையில், சில இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறி, ஹெல்மெட் அணியாமல் அதிவேகத்தில் பைக்குகளை இயக்கியதுடன், வீலி உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டனர். இந்த சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி கைதில் இருந்து தப்பினார்.. குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன்!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வீடியோவை அடிப்படையாகக் கொண்டு எண்ணூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
3 பேரை கைது செய்த போலீசார்:
விசாரணையில், எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22), எண்ணூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) மற்றும் திருவொற்றியூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த தினேஷ் பாபு (18) ஆகியோர் இந்த சாகசத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்.. 3 பேருடன் சென்ற பைக் விபத்து.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளைஞர்!
சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுச் சாலைகளில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் எண்ணூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.