சென்ட்ரல் டூ அரக்கோணம்.. வருகிறது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது முதல் தெரியுமா?
Chennai Central - Arakkonam AC Electric Train Service : சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில் 2025 நவம்பர் மாதம் முதல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான கட்டணம் மற்றும் நேரம் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 10 : சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் (Chennai Central – Arakkonam) வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை (Chennai AC Electric Train) 2025 நவம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல் வேளச்சேரி , அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உன்கிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் சிறப்பான பயணத்திற்கு ஏற்ப பல்வேறு சலுகைகளையும் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.
அண்மையில் கூட, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏசி மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து செங்கல்பட்டு வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 2025 ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 1,488 பயணிகள் ஏசி மின்சார ரயில் பயணித்துள்ளனர். 2025 ஜூலை மாதத்தில் 3,800 ஆக பயணங்கள் எண்ணிக்கை உயர்ந்தது. எனவே ஏசி மின்சார ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், கூடுதல் வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read : நெல்லையில் இருக்கும் பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல்.. 3 பேர் மீது நடவடிக்கை..




சென்ட்ரல் டூ அரக்கோணம் ரூட்டில் ஏசி மின்சார ரயில்
இதனால் சென்னை கடற்கரை -தாம்பரம் வழித்தடத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடம் உள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவையை கொண்டு வர தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில், சென்ட்ரல் – அரக்கோணம் வழிதடத்தில் 2025 நவம்பர் மாதம் முதல் ஏசி மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் 2025 நவம்பர் முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான நேர அட்டவணை, கட்டணம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரையில் இதற்கான பணிகள் முடிவடையும்” என கூறினார். இது பயணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..
கட்டணம் எவ்வளவு?
தற்போது சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலில் 10 கி.மீ வரை ரூ.35 வசூலிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 56 முதல் 60 கி.மீ தூரத்திற்கு ரு.105 வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதே கட்டணம் தான் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை இல்லை எனவும் கூறியுள்ளனர். சாதாரண புறநகர் மின்சார ரயில்களில் 20 கி.மீ வரை 5 ரூபாயும், 56 முதல் 60 கி.மி வரை ரூ.15 வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.