நெல்லையில் இருக்கும் பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல்.. 3 பேர் மீது நடவடிக்கை..
Nellai Police: திருநெல்வேலியில்ன் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பட்டறைகளில் அபாயகரமான ஆயுதங்கள் தயார் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு இருக்கும் பட்டறைகளில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, ஆகஸ்ட் 10, 2025: திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பட்டறைகளில் இருந்து 9 அரிவாள்கள் காவல்துறை தரப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டறைகளை விவசாயிகள் அல்லது மரங்களை வெட்டுவதற்கான உபகரணங்களை மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்றும் அபாயகரமான ஆயுதங்களை தயார் செய்யக்கூடாது எனவும் திருநெல்வேலி காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்து வரையில் தினசரி குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொலை குற்றங்களும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் திருநெல்வேலி மாவட்டம் என்றாலே மக்களிடையே ஒருவிதமான பதட்டம் நிலவுவது நிதர்சனம் தான்.
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்:
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் 22 வயதுடைய நபரை அவர்கள் செய்யும் குற்ற செயல்களை காவல்துறையினருக்கு தெரிவித்ததன் காரணமாக கடுமையாக விரட்டி அறிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க சென்ற காவல்துறை மீதும் அரிவாளால் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதன் காரணமாக போலீசார் தற்காப்புக்காக ஒரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read: பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!
அதேபோல் 2025 ஜூலை மாதம் நெல்லையை சேர்ந்த கவின் என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி காவல்துறை தரப்பில் அங்கு இருக்கக்கூடிய பட்டறைகளில் அபாயகரமான ஆயுதங்கள் தயார் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டறைகளில் அபாயகரமான ஆயுதங்களுக்கு தடை:
மேலும் இந்த உத்தரவை மீறி அரிவாள் கத்தி போன்ற அபாயகரமான ஆயுதங்களை தயார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் அங்கு இருக்கும் பட்டறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று பேருக்கு சொந்தமான பட்டறைகளில் இருந்து அபாயகரமான ஆயுதமான ஒன்பது அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Also Read: இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..
பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்கள்:
மேலும் சுடலையாண்டி, சேர்மவேல், ராமசுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரின் பட்டறைகளில் இருந்து அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநெல்வேலியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்