Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்

Ajithkumar custodial death: திருப்பத்தூர் அருகே கோயில் காவலாளி அஜித்குமார், நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையடுத்து போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது; 5 போலீசர்கள் கைது செய்யப்பட்டனர். நிகிதா மீது மோசடி புகார்கள் உள்ள நிலையில், முழு விவரம் சிபிஐ விசாரணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்
அஜித்குமார் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 09 Jul 2025 07:00 AM

சிவகங்கை ஜூலை 09: சிவகங்கை (Sivagangai) அருகே கோயில் காவலாளி அஜித்குமார் (Guard Ajith Kumar), நிகிதா அளித்த புகாரையடுத்து போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு (Lockup Death) உயிரிழந்தார். அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். புகார் அளித்த நிகிதா (Nikita, who filed the complaint) மீது ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளன என்றும், பொய் புகார் அளித்ததாக சந்தேகம் எழுகிறது. காரை ஓட்டிய அருண்குமார், நிகிதா கூறியது பொய் என தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது அஜித்குமார் மரணம் மற்றும் நகை காணாமல்போனது தொடர்பாக சிபிஐ விசாரணை (CBI investigation) நடைபெற உள்ளது.

10 சவரன் தங்க நகை காணாமல் போனதாக போலீஸில் புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளராக பணியாற்றிய அஜித்குமார், போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஜூன் 27-ஆம் தேதி, நிகிதா என்ற பேராசிரியை தனது தாயுடன் கோயிலுக்கு சென்றபோது, தனது காரை பார்க்கிங் செய்ய அஜித்குமாரிடம் சாவியை ஒப்படைத்துள்ளார். கோயிலில் பூஜையை முடித்துவிட்டு வந்தபோது, 10 சவரன் தங்க நகை காணாமல் போனதாக திருப்புவனம் போலீஸில் புகார் அளித்தார்.

Also read : அஜித் குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை!

அஜித்குமாரை கைது செய்து விசாரணை: உயிரிழப்பு

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்தபோது, அவரை மோசமாக சித்திரவதை செய்ததாக தெரியவந்தது. பின்னர் அவரது உடல்மேல் 50க்கும் மேற்பட்ட காயங்கள், மூளை மற்றும் உடற்கூறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டது என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு புகார்கள்

இந்த நிலையில், தமிழக முதல்வர் அஜித்குமாரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது சகோதரருக்கு அரசு வேலை மற்றும் 3 சதுர செண்ட் நிலம் வழங்க அரசால் அறிவிக்கப்பட்டது. அதேவேளை, புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகார்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நிகிதா அளித்த புகாரின் நம்பகத்தன்மை மீதான சந்தேகங்கள் வெகுவாக எழுகின்றன.

மேலும், அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாத நிலையில், காரை ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஓட்டியதாகவும், நிகிதா கூறியது பொய்யாகும் என அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காரை இருவரும் பார்க் செய்ததாகவும், நிகிதாவின் தகவல்கள் உண்மையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நகை காணாமல் போனதா, பொய் புகாரா என விசாரணை

முன்னதாக, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிகிதா, “நகை என்னுடையதல்ல, அம்மாவுடையது. உடல்நிலை சரியில்லாததால் நான் என் பெயரில் புகார் அளித்தேன்” என்று விளக்கம் அளித்தார். தற்போது நகை காணாமல் போனதா, பொய் புகாரா என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சிபிஐ விசாரணையின் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.