“அணைகளில் நீர் இருந்தும் தர மறுக்கும் கர்நாடகா!”.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி பதில் மனு!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அணைகளில் நீர் இருந்தும் தர மறுப்பதாகக் கர்நாடகா மீது குற்றம்சாட்டியுள்ள தமிழக அரசு, காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற மாநில அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நடப்பு பாசன ஆண்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உரிய நீரைக் கர்நாடகா வழங்காததால், மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்துக் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கர்நாடகாவிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தின் எதிர்கால தொழில் திட்டங்களின் மைல்கல்.. இன்று தொடங்கும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு..
காவிரி ஆணைய உத்தரவும் கர்நாடகாவின் எதிர்ப்பும்:
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டத்தில், தமிழ்நாட்டின் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு 15 நாட்களுக்குத் தினமும் 1 டி.எம்.சி வீதம் மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிடப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசிற்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், காவிரி ஆணையத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த முடியாது எனக் கூறி, வறட்சி காலங்களில் தண்ணீர் கேட்க முடியாது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவைத் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு அரசின் பதில் மனுவும் குற்றச்சாட்டுகளும்:
கர்நாடகாவின் இந்த மனுவிற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில், கர்நாடக அணைகளில் தேவைக்கு அதிகமான நீர் இருந்தபோதிலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிட அம்மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரப் பெறுவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கர்நாடக அரசின் உண்மைக்குப் புறம்பான அவசர மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “நடுக்கடலில் பயங்கரம்!”.. சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு.. தமிழக மீனவர் பரிதாப பலி!!
ஆகஸ்ட் 17-ல் விசாரணை:
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழ்நாட்டிற்குப் வர வேண்டிய 88 டி.எம்.சி தண்ணீருக்குப் பதிலாக இதுவரை வெறும் 10 டி.எம்.சி மட்டுமே கர்நாடகாவால் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களும் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.