ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!
Nursing Student Died By Falling From Train | சேலத்தை சேர்ந்த நர்சிங் மாணவர், பெங்களூரில் உள்ள தனது கல்லூரிக்கு ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சேலம், ஜூன் 16 : சேலம் (Salem) அருகே ஓடும் ரயிலில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில், படியில் நின்று பயணம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், மாணவருக்கு இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஓடும் ரயிலில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவர் விழுந்து பலியான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள மேக்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவரது மகன் அபிஷ்ராஜ். 22 வயதான இவர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சொந்த ஊரில் இருந்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்கு நண்பர்களுடன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
கால் தவறி கீழே விழுந்த அபிஷ்ராஜ் பரிதாப பலி
நண்பர்கள் உடன் இணைந்து அபிஷ்ராஜ் முன்பதிவு இல்லாத பெட்டியில் பெங்களூருக்கு பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது அவர் படிக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அதற்குள்ளாக ரயில், சேலம் ஜங்சன் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பெண்கள் படை இருந்தும் பாலியல் வன்கொடுமை? ரீல்ஸ் ஆர்வத்தை முதல்வர் ரியலில் காட்ட வேண்டும்.. சீமான் அட்டாக்!
அவர்கள் தகவலின் அடிப்படையில் மாணவர் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது அந்த மாணவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.