மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்.. சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு..
இந்த சூழலில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. முன்பு ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.170 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது.
மார்ச் 14, 2026: ஈரான்– இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலைகள் தற்போது கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நீரிணை வழியாகத்தான் உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அந்த பாதை பாதிக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடுமையான உயர்வில் கச்சா எண்ணெய்:
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணை வழி முடங்கியதால் மாற்று வழிகளில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுவதால் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் அமர்த்தராஜ் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சில எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் சில நிறுவனங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3000 வரை உயர்ந்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு:
அதேபோல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கும் மக்கள் அதிக அளவில் முன்பதிவு செய்ததால், சில இடங்களில் ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிகமாக முன்பதிவு செய்வதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு.. மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!!
இந்நிலையில் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட சில பெருநகரங்களில் சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் மத்திய அரசு தரப்பில், இந்தியாவில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், மக்கள் தேவையற்ற பதற்றத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் பல இடங்களில் பெட்ரோல் பங்குகளுக்கு சென்று அதிக அளவில் எரிபொருள் நிரப்பி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், மக்கள் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் விலை உயர்வு:
இந்த சூழலில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. முன்பு ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.170 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், பாமாயில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.120க்கு மொத்த விற்பனை சந்தையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்.. இன்னும் செய்வோம் – சிங்கார சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
இதன் மூலம் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது.
இதனைத் தவிர நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர் சூழல் எப்போது முடிவடையும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.