பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும்.. தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்.. அண்ணாமலை பரபர கருத்து!
We The Leaders Annamalai : பாஜகவுடன், திமுக கூட்டணி அமைக்கும் எனவும், தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழும் எனவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.
பாஜகவுடன், திமுக கூட்டணி அமைக்கும் என்றும், தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து உள்ளது. அந்த கட்சியால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை. சாதாரணமாகவே பாஜக சிக்ஸர் அடிக்கும். காங்கிரசார் இப்படி இருப்பதனாலேயே பாஜக வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது கூட தொகுதி மறுவரையறை மசோதாவில் காலம் கடந்த பின்னரே திமுகவை, காங்கிரஸ் கட்சியினர் சந்தித்துள்ளனர். சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், இந்த மசோதா நிறைவேறிய பிறகு கண்டிப்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்.
திமுகவை சேர்ந்தவர்கள் புனிதர்களாகிவிடுவர்
அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக வருவார். எப்போதும், பாஜக கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது கொண்டுவரப்பட உள்ள மக்களவை தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் புனிதர்களாக மாறிவிடுவார்கள். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இனி தமிழகத்தில் திமுக பக்கமே செல்லாது. அடுத்த 6 மாதங்களுக்குள் இது எல்லாம் சரியாக நடக்கும்.
மேலும் படிக்க: வாழ்வா சாவா என்ற போராட்டம்! தொகுதி மறுவரையறையை ஆதரித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!
பெறவேண்டியதை பெற்றுவிட்டுதான் மறுவரையறைக்கு ஆதரவு
திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்னும் மகாத்மா காந்தி கிடையாது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதைப் பெற்று விட்டு தான் தொகுதி மறு வரையறை விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், உடனடியாக மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்குமா என்று கேட்டால் அது உடனடியாக நடக்காது. ஆனால், எதிர் காலத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன், திமுக கூட்டணி வைக்குமா என்று கேட்டால் நிச்சயம் வைக்கும். வீ த லீடர்ஸ் அமைப்பை பொறுத்தவரைக்கும் மறு வரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. வரவேற்கிறது.
பாஜகவுடன், திமுக கூட்டணி அமைக்கும்
ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே உள்ள விளையாட்டுகளை தான் வெளிகொண்டு வருகிறோம். அதனை விமர்சிக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் விரைவில் கூட்டணி அமைப்பார்கள். அதனை நீங்களும், நாங்களும் பார்க்க தான் போகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே! அப்பாவின் பவர் இப்போது தெரிகிறதா? திவ்யா சத்யராஜ்!