உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்…அண்ணாமலை ஆவேசம்!
Bjp Former President Annamalai: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
சனாதன குறித்து சர்ச்சைக்குரிய வகையில கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். இது தொடர்பாக, கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மத நம்பிக்கை மற்றும் வாழ்வியல் முறையை பின்பற்றக்கூடிய நபர்களை ஒழிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது இனப்படு கொலைக்கு சமமானதாகும். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் குறைந்தபட்சம் வழக்காவது பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் நீதிமன்றத்துக்கு எந்த விதமான மரியாதையும் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதற்கு திருப்பரங்குன்றம் விவகாரம் உள்பட பல்வேறு வழக்குகள் சாட்சியாகும். நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆளும் திமுக அரசு முறையாக பின்பற்றுவதில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்றத்தில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நீதிபதிகள் மீது அடக்குமுறை
அந்த நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியிடப்படுகிறது. அந்த புத்தகத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. திமுக அரசுக்கு நீதிபதிகள் ஆதரவாக செயல்படவில்லை எனில் அவர்களை ஜாதிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் திட்டுகின்றனர். எனவே, நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கும் மன நிலையில் இல்லை. ஒரு காலத்தில் தனித்துவமாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து அந்த கட்சியினர் பேசுவது போல கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க: அரசியல் வாழ்வில் இருந்து விலகுகிறேன்…அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு..என்ன காரணம்!
திமுகவின் ஊது குழலாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சி
திமுகவின் ஊது குழலாக கம்யூனிஸ்ட் கட்சி மாறி உள்ளது. சனாதன ஒழிப்புக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 108 ஆண்டுகளாக ஜாதிகளை ஒழிப்பதாக கூறி, அந்த ஜாதிகளை வளர்த்துள்ளனர். எனவே, கம்யூனிஸ்ட் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஊது குழலாக இருப்பதை தவிர்க்க வேண்டும். கறிக்கோழி உரிமையாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு தேவையில்லாமல் பஞ்சாயத்து செய்து விவசாயிகளை கைது செய்துள்ளது.
திமுக ஆளுங்கட்சியா (அ) எதிர்க்கட்சியா
தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதை பார்க்கும்போது திமுக ஆளுங்கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற சந்தேகம் வருகிறது. இதற்கெல்லாம் 50 நாட்களில் தீர்வு எட்டப்பட உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும். தமிழக அரசு மக்களிடம் கனவை கேட்டு வருகிறது. என்னுடைய கனவு திமுக அரசு ஆட்சியை விட்டு விலகி விட வேண்டும் என்பதாகும். திமுக அரசு மீது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வைத்த குற்றச்சாட்டுக்கு அந்த அரசால் பதில் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..



