அரசியல் வாழ்வில் இருந்து விலகுகிறேன்…அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு..என்ன காரணம்!
Former AIADMK MLA Kunnam Ramachandran: அதிமுகவின் முன்னாள் எம் எல் ஏ குன்னம் ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தான் எந்த கட்சியிலும் பயணிக்க போவதில்லை எனவும், அரசியில் வாழ்வில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ குன்றம் ராமச்சந்திரன் தான் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக முடிவு செய்து இருந்தேன். ஆனால், எனது குடும்பத்தினர் வற்புறுத்தலின் காரணமாகவும், உடல் நலக்குறைவின் காரணமாகவும் நான் வேறு முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, நான் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலக உள்ளேன். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான நிலையிலும், எனது உடல் நிலையின் காரணமாகவும், குடும்பத்தினரின் நிம்மதிக்காகவும் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே, வரும் காலங்களில் நான் எந்த விதமான அரசியல் கட்சிகளிலும் பயணிக்கப் போவதில்லை. திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் உள்ளிட்டோர் என்னை மன்னிக்க வேண்டும்.
வீட்டில் ஜெயலலிதா படத்தை அகற்ற போகிறாயா
மேலும், என்னுடன் பயணித்த கட்சி தொண்டர்கள் அவரவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று காலை அமைச்சரிடம் நான் பேசியபோது, எனது குடும்பத்தினர் அனைவரும் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தனர். பின்னர், இந்த கூட்டத்தை முடித்துவிட்டு நான் வீட்டுக்கு சென்ற போது, எனது குடும்பத்தினர் அதிமுக கட்சியில் இருந்து விலகப் போகிறாயா என்று என்னிடம் கேட்டனர். வீட்டில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை அகற்றப் போகிறாயா எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க: கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்.. பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?
அரசியல் வாழ்வில் இருந்து விலகுகிறேன்
இதனால், நான் மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளானேன். எனவே, நான் எந்த விதமான அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை எனவும், அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாகவும் முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த வைத்திலிங்கம் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் வரும் ஜனவரி 26- ஆம் தேதி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக நேற்று குன்னம் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் தனது முடிவை மாற்றி அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குன்னம் ராமச்சந்திரனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியதுடன், பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
மேலும் படிக்க: ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..



