திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு
Amit Shah Welcomes TTV Dhinakaran: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செலாளர் டிடிவி தினகரன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இந்த நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 21 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்து நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran), தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து அவரது முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். கடந்த சில மாதங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்த டிடிவி தினகரன் தற்போது அவருடன் ஒரே கூட்டணியில் இணைந்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்களது பிரச்னை பங்காளி சண்டை போன்றது என டிடிவி தினகரன் விளக்கமளித்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததற்கு அமித் ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு
என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு வரவேற்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வளமான தமிழகம் – வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன். திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசிர்வதிக்க தயாராக இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க :“என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்”.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!
அமித் ஷாவின் எக்ஸ் பதிவு
வளமான தமிழகம் – வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
திரு. @TTVDhinakaran அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.
திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள்…
— Amit Shah (@AmitShah) January 21, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நல்லாட்சியை மீட்டெடுக்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். கட்சி மற்றும் மாநில நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
இதையும் படிக்க : நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?
பாஜக – அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் ஜனவரி 23, 2026 அன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் இணைக்க, கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார். மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருடைய அரசியல் அனுபவமும் களப்பணியும் பாராட்டத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றார்.