நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?
திமுக மாவட்ட செயலளர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
டெல்லி, ஜனவரி 21: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. டெல்லியில் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தால் அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில், காங்கிரஸ் மனநிலையில் திடீரென பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறிகின்றன. குறிப்பாக அவர்கள் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் தீவிர முனைப்பி காட்டி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில், இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக ஆதரவு மனநிலை நிர்வாகிகளிடையே அதிகமாக இருப்பதை ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் தவெக?.. கூட்டணி நிலவரம் எப்படி உள்ளது?
ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்:
இதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்க கனிமொழி மற்றும் டிஆர்.பாலு ஆகியோர் அனுமதி வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் தமிழக நிர்வாகிகள் பலர், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் பேசியதால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு:
இந்நிலையில், டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து டெல்லி மேலிடம் எடுக்கும் முடிவையே தமிழ்நாடு காங்கிரஸ் பின்பற்ற வேண்டும்; பொதுவெளியில் கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதன் பின் தமிழகம் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. கட்சி நிர்வாகிகளிடம் தனியாக பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மா.செ கூட்டத்தில் முதல்வர் அறிவுரை:
அவரது கருத்து மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவர்கள் ஏற்கெனவே, திமுக கூட்டணியில் இடம்பெற்று வரும் நிலையில், ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தது. அவர்களது கூட்டணி நிலைப்பாடு மாறிவிட்டதை வெளிகாட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தங்களது பிடிவாதத்தில் இருந்து திமுக இறங்கி சென்று காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
அந்தவகையில், திமுக மாவட்ட செயலளர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது. கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டம்:
இதன் மூலம் காங்கிரஸின் போக்கை அறிந்த அவர், நிர்வாகிகள் அவரசப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதேசமயம், காங்கிரஸ் கேட்கும் தொகுதியை தர முன்வரலாம் என்றும் தெரிகிறது. எப்படியாவது கூட்டணியை தக்கவைத்து விட வேண்டும் என ஸ்டாலின் முனைவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக, விரைவில் திமுக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த குழு விரையும் என்றும் தெரிகிறது.