அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
NDA alliance: இந்த கூட்டணி ஒரு குடும்பம் போல் செயல்படும் என்றும் ஒவ்வொரு முடிவுகளும் குடும்பத்தினர் போலவே எடுக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி மிக மோசமான தோல்வியை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை, ஜனவரி 22: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சியும் இணைந்துள்ளதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகளும், தொகுதிப் பங்கீடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்திருந்த நிலையில், தற்போது தமாக, புதிய நீதிக்கட்சி ஆகிய 2 கட்சிகளும் இணைந்துள்ளன. நேற்றைய தினம் டிடிவி தினகரனின் அமமுக இணைந்ததாக அறிவித்த நிலையில், இன்று மேலும் இரண்டு கட்சிகள் அக்கூட்டணியில் இணைந்துள்ளன.
மேலும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு
NDA கூட்டணி வெற்றிக் கூட்டணி:
இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை இன்று காலை ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு முடிந்ததும் ஜி.கே.வாசன், பியூஷ் கோயல், ஏ.சி.சண்முகம் ஆகிய மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி உறுதியானதாக அறிவித்தனர். அப்போது பேசிய ஜி.கே.வாசன், NDA கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணி மக்கள் விரோத திமுகவை வீழ்த்தக்கூடிய பலமான மக்களுடைய நம்பிகையை பெற்றுள்ள கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் என்றும் கூறினார்.
குடும்பமாக செயல்படும் கூட்டணி:
தொடர்ந்து, பேசிய ஏ.சி.சண்முகம், இந்த தேர்தலில் புதிய நீதிக்கட்சி இந்த தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக பணியாற்றும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய பியூஷ் கோயல், இந்த கூட்டணி ஒரு குடும்பம் போல் செயல்படும் என்றும் ஒவ்வொரு முடிவுகளும் குடும்பத்தினர் போலவே எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி மிக மோசமான தோல்வியை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் மக்களால் ஒதுக்கப்பட்டு வருவதை, தமிழக மக்கள் நன்கு அறிவர் என்றும் கூறினர்.
மேலும் படிக்க: ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..
NDA கூட்டணியில் இடம்பெறுமா தேமுதிக?
இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை (23-ம் தேதி) மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு அனைத்துக் கூட்டணி தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அடுத்த சந்திப்புகள் மூலம் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இக்கூட்டணயில் ராமதாஸ் தரப்பு பாமகவும், தேமுதிகவும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.