பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு
Anbumani Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணி வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் எனவும் தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 11 : அன்புமணியை (Anbumani Ramadoss) பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) அறிவித்துள்ளார். மேலும், பாமக உறுப்பினர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக் கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவராக செயல்பட அன்புமணி தகுதியற்றவர் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே தந்தை, மகன் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. டிசம்பர் மாதத்தில் இருந்தே தனது பேரன் முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்ததில் இருந்தே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
தனக்கே கட்சியில் முழு அதிகாரம் எனவும் நானே தலைவர் எனவும் ராமதாஸ் கூறி வருகிறார். அதே நேரத்தில், இருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அண்மையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது. இந்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்புமணி பதிலளிக்கவில்லை.
Also Read : கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..




பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்
இதனால், அன்புமணிக்கு 2025 செப்டம்பர் 4ஆம் தேதி வரைகெடு விதிக்கப்பட்டு இருந்தது- அதன்பின்னரும், அன்புமணி பதிலளிக்க 2025 செப்டம்பர் 10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், “அன்புமணி பாகமவில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீறி தொடர்பு வைத்தால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்கத் தயார். அன்புமணியோடு இருந்தால் பலன் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் அங்கு இருந்திருக்கலாம்.
Also Read : அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!
ராமதாஸ் என்ற தனி மனிதர் ஆரம்பித்த கட்சி பாமக. இதற்கு உரிமை கோர எனது மகன் உள்பட யாருக்கும் உரிமையில்லை. எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. வேண்டுமென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அன்புமணி தனிக் கட்சி ஆரம்பிக்கலாம். அன்புமணி கட்சி தொடங்கினாலும் அது வளராது. ஒரு பயிரிட்டால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. களையை நீக்கிவிட்மோம். குந்தகம் விளைவிப்பவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்” எனக் கூறினார்.