Edappadi Palaniswami: அமித்ஷாவுடன் ரகசிய ஆலோசனை.. முகத்தை மூடிக்கொண்டு சென்ற இபிஎஸ்!
AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் உட்கட்சி கருத்து வேறுபாடுகள், 2026 தேர்தல் வியூகங்கள், பாஜகவுடனான கூட்டணி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்ததாகத் தெரிகிறது. தலைவர்களுடன், தனியாகவும் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

டெல்லி, செப்டம்பர் 17: டெல்லி சென்றுள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இப்படியான நிலையில் அதிமுகவில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகியவை வெளியேறியதாலும் சலசலப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 16) டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
Also Read: பாஜகவின் டம்மி வாய்ஸா எடப்பாடி பழனிசாமி..? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும், தேர்தல் பரப்புரையை தலைவர்கள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதேபோல அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணியில் இருக்கும் பிற கட்சியினர் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
முகத்தை மூடிக்கொண்டு சென்ற இபிஎஸ்
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இருந்தனர். இதற்கிடையில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது டெல்லி போலீசாரின் இரண்டு பாதுகாப்பு வாகனத்துடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அமைச்சவை சந்திக்க சென்றுள்ளனர்.
Also Read: மீண்டும் இணைகிறதா அதிமுக? – செங்கோட்டையன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
தொடர்ந்து அனைவரும் ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி உடன் சென்றவர்கள் அமித்ஷா இல்லத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும் சென்றதாக தெரிவிக்கும் வகையில் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வாகனமும் சென்று விட்டது. இதன் பின்பு ஹிந்தி மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழி பெயர்ப்பாளர் கொண்டு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது அதன் பின்னர் அவர் எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் கைகுட்டையால் தனது முகத்தை மூடியபடி காரில் சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.