’அதிமுக ஆட்சிக்கு வராது.. உதயநிதி சொன்னது உண்மை தான்’ டிடிவி தினகரன் பேட்டி
TTV Dhinakaran On Edappadi Palanisamy : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்கு அவரே காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 11 : எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்கு அவரே காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டு முன்பே கூட்டணி அமைத்திருந்தாலும், கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் செங்கோட்டையன் கூறி வருகிறார். அதாவது, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்க அவருக்கு 10 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார்.
இதற்கு மறுத்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். இப்படியாக அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் விலகியுள்ளனர். கூட்டணி அமைந்த 4 மாதங்களிலேயே இரண்டு கட்சிகள் விலகியுள்ளது. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று அவரின் செயல்பாடுகள் நன்றாக இல்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Also Read : கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!




“அதிமுக ஆட்சிக்கு வராது”
இதற்கு நயினார் நாகேந்திரன், நான் எப்படி காரணமாக இருக்க முடியும் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியும் விலகுவது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று மதுரையில் செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் அதிமுகவினரின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
Also Read : அதிமுகவில் சலசலப்பு.. 5ம் கட்ட சுற்றுப் பயணத்திற்கு தயாரான இபிஎஸ்.. விவரம் வெளியீடு
இதற்கு பதில் அளித்த அவர், “உதயநிதி சொல்வது உண்மை தான். துரோக சிந்தனை உள்ள எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. மற்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட பாஜக தமிழகத்தில் எது தேவையென்பதை உணர வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும்” என்றார்.