Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் விளங்குமா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கேள்வி..

Minister TRB Raja Statement: தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ‘திராவிட மாடல் அரசு’ கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. வெள்ளை அறிக்கை கொடுத்தால்தான் விளங்குமா” என கேட்டுள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் விளங்குமா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2025 08:20 AM IST

சென்னை, செப்டம்பர் 10, 2025: தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். “சேக்கிழார் எழுதிய இராமாயணத்தைப் படித்தவருக்கு தொழில்துறை அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு புரியும் என்று தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

அங்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் 2025 ஆகஸ்ட் மாதம் லண்டன் மற்றும் ஜெர்மனி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது சுமார் ₹15,516 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிசாமி:

ஆனால், தொழில் முதலீடுகளைப் பற்றிய வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்படியான சூழலில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சீர்கெட்ட நிர்வாகத்தால், தமிழ்நாடு என்று பெயர் கேட்டாலே தொழில் முதலீட்டாளர்கள் தெரிந்து ஓடிக்கொண்டிருந்த நிலை இருந்தது. ஆனால் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி இவ்வாறான அறிக்கைகளை விடுகிறார்.

மேலும் படிக்க: ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!

சொந்த கட்சி பிரச்சினைகளால் ‘கோமா’வில் இருந்து திடீரென விழித்த எடப்பாடி பழனிசாமி, அதே விஷயத்தையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். சேக்கிழார் அருளிய இராமாயணத்தைப் படித்தவருக்கு தொழில்துறை அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் எவ்வளவு புரியும் என்பது சந்தேகம்.

முதலீடுகள் குறித்து விளக்கம் – டி.ஆர்.பி ராஜா:

36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டியுள்ளன. மேலும், 11 நிறுவனங்களில் நில எடுப்பு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன; அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..

வெள்ளைக்கொடி வேந்தர் எடப்பாடி பழனிசாமி:

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ‘திராவிட மாடல் அரசு’ கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. உங்களுக்கு வெள்ளை அறிக்கை கொடுத்தால்தான் விளங்குமா? நான் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், ஒரு வெள்ளை தாளை வீணடிக்க விரும்பவில்லை. ‘இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொல்லிவிட்டு, பின்னர் மீண்டும் கூட்டணி அமைத்த வெள்ளைக்கொடி வேந்தர் எடப்பாடி பழனிசாமிக்கு கூறிக்கொள்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.