AIADMK: மீண்டும் இணைகிறதா அதிமுக? – செங்கோட்டையன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
KA Sengottaiyan: செங்கோட்டையன் அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தவிருக்கும் கூட்டம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து வேறுபாடு, கட்சியின் எதிர்காலம், 2026 தேர்தல் கூட்டணி என பல்வேறு அம்சங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு, செப்டம்பர் 3: செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தை நான் பிரதிபலிக்க போகிறேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கள நிலவரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, சில அரசியல் கட்சி தலைவர்கள் 234 தொகுதிகளிலும் முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதே சமயம் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 2021 தேர்தலை ஒப்பிடும்போது தற்போது பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல்
அப்போது இரட்டை தலைமை என ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தனர். ஆனால் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சி ஓபிஎஸ்ஐ கட்சியை வீட்டை நீக்கும் படி செய்தது. இப்படியான நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
Also Read: இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. கூட்டணிக்கு வராத கட்சிகள் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்!
குறிப்பாக 2025 பிப்ரவரி மாதம் கோவை மாவட்டம் அன்னூரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர்களில் எங்கும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறாதது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதனை சுட்டிக்காட்டி விமர்சித்த செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார்.
அதேபோல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.அவர் தனது முதல் பயணத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். அப்போது செங்கோட்டையன் வசிக்கும் பகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக சென்றார். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் வரவேற்பு அளிக்கவில்லை இது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியது.
ஒருங்கிணைந்த அதிமுக
இப்படியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். சட்டப்படி எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றம் சென்று தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றிருக்கிறார். அதேசமயம் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி வசப்படும் என சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
Also Read: மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசலா..? எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து.. புறக்கணித்த செங்கோட்டையன்!
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இது கட்சிக்குள் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தொண்டர்களின் எண்ணமாகவும் இருந்து வருகிறது.
காரணம் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு அக்கட்சி பிரிந்ததே காரணம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் செங்கோட்டையன் தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க போகிறேன் என தெரிவித்து இருப்பது அவர் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்த போகிறாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு தான் யாரையும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். நேற்று என்னுடைய கட்சி அலுவலகத்தில் கூடிய அத்தனைப் பேரும் அவர்களாகவே வந்தார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில் முன்னாள் எம்பியும், அதிமுக ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரான சத்தியபாமா, அதிமுக நலன் கருதி செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.