தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்
DMK and ADMK Alliance Meeting : திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க, இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மே 6 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4, 2026 அன்று வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக தொகுதிகள் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தவெக ஆட்சியமைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து மே 7, 2026 அன்று ஆட்சி பொறுப்பேற்கவிருக்கிறார்.
தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை
இதற்கிடையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க, இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. தற்போது மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த கூட்டணிக்கு தலைவராக முடியாது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!




முன்பு நடந்த திமுக – அதிமுக பேச்சுவார்த்தை ?
கடந்த 1979களில் பிஜு பட்நாயக் திமுக மற்றும் அதிமுகவை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் முதல்வராக இருந்த எம்ஜிஆரே தொடரலாம் எனவும், கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது ஆனால் அவரது முயற்சி நடக்கவில்லை. தற்போது அது போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம் தவெகவிற்கு பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். இந்த நிலையில் அவர் 18 எம்எல்ஏகளின் ஆதரவு கடிதத்தை வழங்காததால், ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தங்களது கட்சியின் சட்ட நிபுணர்களுடன் ஆளுநரை சந்தித்து வருகிறார்.
இதனையடுத்து எதிர்பார்த்தபடி மே 7, 2026 அன்று தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை அக்கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திமுக – அதிமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. கையில் வாளுடன் கேக் வெட்டிய விஜய் தாமு!
இந்த நிலையில் அதிமுக – திமுக இணைந்து ஆட்சியமைப்பது என்றால் தற்போது மு.க.ஸ்டாலினால் அக்கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது என கூறப்படுகிறது. காரணம் அவர் கொளத்தூர் தொகுதியில் தோற்றிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியே கூட்டணிக்கு தலைமை வகிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கின்றன , அதன் சாத்திய கூறுகள் குறித்து இனி வரும் நாட்களில் தகவல் வெளியாகலாம்.