“ஹெல்மெட் இல்லாத விபத்து மரணங்கள்”.. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை!
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் ஆகிய இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் ஓட்டுநர் உரிமமும் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 14: இந்தியாவில் நிகழும் சாலை விபத்து மரணங்களுக்குத் தரமான ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததே மிக முக்கியக் காரணமாக உள்ளதாக மத்திய அரசின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. இதில் கவலைக்குரிய விஷயமாக, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் விபத்துகளில் உயிரிழந்த 81,780 இருசக்கர வாகன ஓட்டிகளில், சுமார் 40 விழுக்காட்டினர் ஹெல்மெட் அணியாதவர்கள் ஆவர்.
மேலும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
அறிக்கையின் முக்கியப் புள்ளிகள்:
தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட விபத்து மரணங்களில், 7,744 உயிரிழப்புகளுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கார் விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 50 விழுக்காட்டினர், முறையாகச் சீட் பெல்ட் அணிந்திருந்தால் தங்களின் உயிரைத் தக்கவைத்திருக்கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணியும் போது, அவர்கள் விபத்துகளில் இருந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 42 விழுக்காடு வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) தெரிவித்துள்ளது.
கடுமையாக்கப்படும் சட்டங்களும் அபராதமும்:
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் ஆகிய இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் ஓட்டுநர் உரிமமும் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போலி ஹெல்மெட்டுகளைத் தவிர்ப்பீர்:
போலீசாரின் அபராதத்திற்குப் பயந்து சாலையோரங்களில் விற்கப்படும் மலிவான, போலி ஹெல்மெட்டுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். விபத்தின் போது தலையைக் காக்க எப்போதும் ‘ஐஎஸ்ஐ’ (ISI) முத்திரை கொண்ட தரமான ஹெல்மெட்டுகளையே வாங்க வேண்டும்.
மேலும் படிக்க: அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!
ஒரு தரமான ஹெல்மெட் என்பது விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில், அதன் வெளிப்பகுதி மிகவும் உறுதியாகவும், உள்பகுதி தடிமனான தெர்மோகோல் கொண்டதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, தலைக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய, முழு முகத்தையும் மூடக்கூடிய தலைக்கவசங்களே விபத்துகளின் போது முழுமையான பாதுகாப்பைத் தரும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.