மதுராந்தகத்தில் இன்று NDA-வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. 5 லட்சம் பேர் திரள வாய்ப்பு..
PM Modi visiting Tamil Nadu today: இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கேரளாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.
சென்னை, ஜனவரி 23: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 23) மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களையும் தேர்தல் பிரச்சாரத் திட்டங்களையும் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்தச் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு
கூட்டணியை இறுதி செய்த பியூஷ் கோயல்:
இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். குறிப்பாக இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக, அவர் கடந்த 21ம் தேதி இரவு சென்னைக்கு வந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசியது முதல், அதிமுக மற்றும் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.




பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சிகள்:
இதைத் தொடர்ந்து, பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார். மேலும், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று பிற்பகல் சென்னை வருகிறார் மோடி:
இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கேரளாவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். அங்கு, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்பார்கள். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஒற்றுமையை வெளிப்படுத்தும் தலைவர்கள்:
அந்தப் பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கூட்டாகக் கைகளை உயர்த்துவார்கள். மாலை 3:10 மணிக்கு மேடைக்கு வரும் பிரதமர் மோடி, தனது உரையை முடித்துவிட்டு, மாலை 4:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்திற்குத் திரும்பி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக 15,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று நாள் முழுவதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.