பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
Traffic Diversion Alert : தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மதுராந்தகத்தில் ஜனவரி 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை அருகே பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 22 : பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜனவரி 23. 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுராந்தககத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வரவிருக்கிறார். தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார். இதனையடுத்து மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சென்னை–திண்டிவனம் ஜி.எஸ்.டி. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஜனவரி 23, 2026 பிற்பகல் போக்குவரத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகயை முன்னிட்டு 3 அடுக்கு பாதுகாப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனவரி 23, 2026 அன்று மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்காக தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு சுமார் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்…அண்ணாமலை ஆவேசம்!




டெல்லியிலிருந்து மத்திய பாதுகாப்புப் படையினர் ஜனவரி 21, 2026 நேற்று காலை முதல் சென்னை வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஜனவரி 23. 2026 நாளை காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பிற்பகல் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அதன் பின்னர், பிற்பகல் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையை அடைவார்.
அங்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு காரணங்களால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. செங்கல்பட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 23, 2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை வழித்தடங்களில் செல்லும் கனரக வாகனங்கள், கிழக்குக் கடற்கரை சாலை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வந்தவாசி உள்ளிட்ட மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்படும்.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
மேலும், சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லலாம் எனவும், ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி வழித்தடங்களையும் பயன்படுத்தலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்களுக்கும் தனித்தனி மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், நாளை பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவும், காவல்துறையின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.