கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார்.. தீவிர ஆலோசனையில் போலீஸ்!!
தலைமறைவாக உள்ள இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குத் திருவல்லிக்கேணி போலீசார் நேரில் சென்று, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சம்மன் ஒட்டினர். அதன்படி, இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை காவல் நிலையத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
சென்னை, ஜூலை 06: தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரை வளைக்கக் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இன்ற ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனின்படி, அவர்கள் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!
வழக்கின் பின்னணி:
கடந்த ஜூன் 29-ஆம் தேதி, ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் ஒரு பரபரப்பு புகார் அளித்தார். அதில், “சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது ஆளுங்கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால், 35 கோடி ரூபாய் வரை பணம் தருவதாகக் கூறி திமுகவினர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தினர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாகத் திருநாகாஸ் என்ற நபரை கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன், செல்வின், சீனிவாசன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கரூர் ரமேஷ் கார்த்திக் மற்றும் செந்தில் பாலாஜியின் மாமா அசோக் குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு?
விசாரணையின் போது கைதானவர்கள், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டோம்” என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் காரணமாக, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை கைது செய்ய தனிப்படை போலீசார் கரூரில் உள்ள பூர்வீக வீடு உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றைய பரபரப்பு நிலைமை:
தலைமறைவாக உள்ள இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குத் திருவல்லிக்கேணி போலீசார் நேரில் சென்று, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சம்மன் ஒட்டினர். அதன்படி, இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை காவல் நிலையத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட நேரம் கடந்தும் செந்தில் பாலாஜியோ அல்லது அவரது சகோதரரோ நேரில் ஆஜராகவில்லை. அதேநேரம், அசோக் குமார் தரப்பில் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து அவர்கள் ஆஜராவார்களா அல்லது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் யாராவது காவல் நிலையத்திற்கு வந்து கடிதம் ஏதேனும் வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு
ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய போது, அவர் மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூரில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் செந்தில் பாலாஜி தரப்பும் செயல்படுமா அல்லது போலீசார் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்களா என்பது இனி வரும் மணி நேரங்களில் தெரியவரும்.