AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிட்ரின் பறிமுதல்.. தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது!

Chennai Crime: முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சூடோஎபிட்ரின் வேதிப்பொருள் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று, மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருளை சட்டவிரோதமாக தயாரிக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூடோஎபிட்ரின் மற்றும் எபிட்ரின் ஆகிய வேதிப்பொருட்கள் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களாகும்.

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிட்ரின் பறிமுதல்.. தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Nov 2026 10:51 AM IST

நவம்பர் 14, 2026: சென்னையில் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ரூ.1 கோடி மதிப்பிலான 50 கிலோ சூடோஎபிட்ரின் (Pseudoephedrine) வேதிப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலையில் அதிரடி சோதனை

சென்னை எம்.கே.பி. நகர், அன்னை இந்திரா நகர் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை என்ற பெயரில் ‘எம்/எஸ் ஏ.என். எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மேலும் படிக்க: உரக்கடை மேற்கூடை உடைத்து ரூ.30 லட்சம் பணம் திருட்டு.. தூத்துக்குடியில் ஷாக் சம்பவம்!

இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு சாக்கு மூட்டைகளில் தலா 25 கிலோ வீதம் மொத்தம் 50 கிலோ சூடோஎபிட்ரின் வேதிப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெத்தம்பெட்டமைன் தயாரிக்க திட்டம்

முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சூடோஎபிட்ரின் வேதிப்பொருள் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று, மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருளை சட்டவிரோதமாக தயாரிக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூடோஎபிட்ரின் மற்றும் எபிட்ரின் ஆகிய வேதிப்பொருட்கள் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களாகும். பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ சூடோஎபிட்ரின் மூலம் சுமார் 50 கிலோ மெத்தம்பெட்டமைன் தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்.. டூரிஸ்ட் விசாவில் வந்து மெத்தம்பெட்டமைன் விற்பனை.. மகாபலிபுரத்தில் பதுங்கிய நைஜீரியர் மீண்டும் போலீஸ் கஸ்டடியில்!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு கடத்தல்?

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், எபிட்ரின் மற்றும் சூடோஎபிட்ரின் போன்ற வேதிப்பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கடத்தல் பின்னணியில் செயல்படும் மற்ற நபர்கள் யார், வேதிப்பொருளின் உண்மையான மூல ஆதாரம் என்ன, எந்தெந்த நாடுகளுக்கு இவை கடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன என்பது குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow Us