ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்.. 3 மாணவர்களுக்கு எமனாக மாறிய ஏரி நீர்! அடுத்தடுத்து நடந்த சம்பவம்!
Ranipet Crime ; ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் ஏரியில் குளிப்பதற்காக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் டி. வி. கே. நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பார்த்திபன் ( 13 வயது). இதே பகுதியை சேர்ந்தவர்களான சரவணன் மகன் நித்திஷ் ( 14 வயது). கமலக்கண்ணன் மகன் நித்திஷ் (13 வயது). இவர்கள் 3 பேரும் சிப்காட் பகுதியில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தற்போது, தமிழக முழுவதும் 10- ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு காலை வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் மட்டுமே பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக நண்பர்களான மூன்று பேரும் சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது, மூன்று பேரும் ஏரியின் உள்ளே இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஏரி நீரில் 3 மாணவர்களும் மூழ்க தொடங்கியதுடன், பயத்தில் சத்தமிட்டனர். அப்போது, இதை பார்த்த அருகில் இருந்த நபர் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்களை உதவிக்கு அழைத்து ஏரியில் மூழ்கிய மாணவர்களை மீட்டனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பின்னர், அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி, தீவிர சிகிச்சைக்கு வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த மாணவர்களை சிப்காட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் படிக்க: கருணை கொலை செய்யப்பட்ட ஹரிஷ் ராணா.. 10 நாட்களுக்கு பிறகு உயிர் பிரிந்தது!




அடுத்தடுத்து பிரிந்த மூன்று உயிர்கள்
ஆனால், தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில், சிகிச்சை பலன் இன்றி 3 மாணவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு, உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது பார்ப்போரின் மனதை ரணமாக்கும் வகையில் இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் இருந்த சிப்காட் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 மாணவர்களின் சடலங்களை மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களின் பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சிப்காட் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் இடையே மட்டும் இன்றி, அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை அல்வா உற்பத்தி முடங்குமா?