நாதக-தவெகவினர் கடும் மோதல்…3 பேர் கைது…இருவருக்கு வலை வீச்சு!
NTK And TVK Clash: தேனியில் நாம் தமிழர் கட்சியினருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தவெகவைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

தேனியில் நாதக-தவெகவினர் மோதலில் 3 பேர் கைது
தேனியின் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் லெஃப்ட் பாண்டி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் ஆகியோர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி ஆகியோரை சாட்டை துரை முருகன் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இவர் பேசிக் கொண்டிருந்த போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 4 கார்களில் அந்த பகுதிக்கு வந்தனர்.
நாதக கூட்டத்தில் விஜய் வாழ்க என்று கோஷம்
அப்போது, அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் வாழ்க, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்க என்று கோஷமிட்டனர். உடனே, கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களை நோக்கி சென்றனர். உடனே, நாதக கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் அவர்களை தடுத்து நிறுத்தினார்.இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சாட்டை துரை முருகன் கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி..”வி”-இல் தொடங்கும்..எந்த தொகுதி அது!
தவெகவினர்- நாதகவினர் இடையே மோதல்- கார் கண்ணாடி உடைப்பு
இதில், தமிழக வெற்றிக் கழகத்தினர் வந்த 4 கார்களில் 3 கார்கள் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் ஒரு கார் மட்டும் கூட்டத்தினுள் மாட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், தவெகவினர் வந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சிறிய மோதல் நடைபெற்றது.
தவெகவினர் 3 பேர் கைது- இருவருக்கு வலை வீச்சு
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு பிரிவினரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: சேலத்துக்கு உங்க விஜய் நான் வரேன்…திட்டமிட்டபடி மக்கள் சந்திப்பு..நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!