கோவை ஜிடி நாயுடு பாலத்தில் கார் விபத்து.. 3 பேர் உயிரிழப்பு
Coimbatore Car Accident: கோவை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஒரு வாரத்திற்குள் நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர், அக்டோபர் 13: தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலம் என்ற சிறப்பை பெற்ற கோவை மாவட்டத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் விபத்து நடைபெற்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்திலிருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு ஜிடி நாயுடு மேம்பாலம் வழியாக கார் ஒன்று இன்று அதிகாலை மிக வேகமாக வந்துள்ளது. இந்தக் கார் ஆனது கோல்ட்வின்ஸ் பகுதியில் பாலத்தில் இருந்து வேகமாக இறங்கியபோது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் மிக வேகமாக சென்ற காரானது லாரிக்கு அடியில் புகுந்து அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக உப்பிலிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் மீட்பு படையினருடன் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி காரை லாரியின் அடியில் இருந்து மீட்டனர். இந்த சம்பவத்தில் லாரியின் பின்பக்கம் சேதமடைந்தது.
இதையும் படிங்க: ஜிடி நாயுடு பாலம்.. மூட வைத்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?




இதனைத் தொடர்ந்து காரில் இருந்த உடல்களை மீட்ட போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா?.. மேம்பாலம் இறங்கும் பகுதியில் லாரி நின்றதன் காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறப்பு விழா கண்டு 5 நாட்கள் ஆன நிலையில் இந்த மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாதது காரணமா?
கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் திமுக ஆட்சியில் முடிவடைந்து கடந்த அக்டோபர் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாலத்தை திறந்து வைத்து காரில் சென்றார். சுமார் 10.10 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த மேம்பாலத்தைக் காண முதல் நாள் அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இரவு நேரத்தில் குவிந்தனர்.
இதையும் படிங்க: ஜி.டி. நாயுடு பெயர் பிரச்சனை.. எதிர்க்கட்சி விமர்சனத்திற்கு தங்கம் தென்னரசு விளக்கம்!
இதனால் மேம்பாலம் அமைந்துள்ள பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம் மேம்பாலத்தில் எங்கு ஏறி, எங்கு இறங்க வேண்டும் போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போன நிலையில் இதனை கவனத்தில் கொண்ட காவல் துறையினர் ஒரு வார காலத்தில் பாலத்தில் தேவையான அனைத்து எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் இந்தப் பாலத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.