ஜிடி நாயுடு பாலம்.. மூட வைத்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?
G.D. Naidu Flyover: கோவையில் தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலம் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஆனால் முதல் நாளே போக்குவரத்து நெரிசலால் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்புப் பலகைகள் இல்லாதது, அதிக வேகம், மக்களின் செல்ஃபி மோகம் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், அக்டோபர் 11: கோயம்புத்தூர் மாவட்டத்தில் திறப்பு விழா கண்ட தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் முதல் நாளே மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஒருவாரத்திற்கு அந்த பாலத்தில் இரவு போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் கடந்த 2025 அக்டோபர் ஒன்பதாம் தேதி தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கிலோமீட்டர் தொலைவிற்கு உப்பிலிபாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் வரை கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்டும் பணியானது தொடங்கியது.
அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு இந்த மேம்பாலம் கட்டும் பணியானது நடந்து வந்தது இந்த நிலையில் அக்டோபர் 9ம் தேதி இந்த பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு ஜிடி நாயுடு பாலம் என பெயரிட்டார். இதன் மூலம் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
Also Read:கோவை மக்களின் கனவு.. அவிநாசி மேம்பாலம் திறப்பு.. சிறப்பம்சங்கள் என்னென்ன?




ஆனால் அந்த பாலம் முதல் நாள் இரவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கோவை மாவட்ட மக்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
நடந்தது என்ன?
காரணம் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையுடன் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு ஏராளமான பகுதிகள் இந்த பாலத்தின் கீழ் வரும் நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் கட்டப்பட்ட இந்த புதிய பாலத்தின் அழகை ரசிப்பதற்காக அக்டோபர் 9ஆம் தேதி இரவு மேம்பாலத்திற்கு படையெடுத்தனர்.
மேலும் நீளமான பாலம் என்பதால் வேக கட்டுப்பாடு இன்றி இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை இயக்கியுள்ளனர். மேலும் மேம்பாலத்தில் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி போட்டோ, வீடியோ பதிவுகளையும் எடுக்க தொடங்கியுள்ளார்கள்.
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் என அறிவிப்பு வழங்கும் பதாகைகள் வைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக எந்த பக்கம் ஏறி எந்த பக்கம் இறங்க வேண்டும் என தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளார்கள்.
Also Read: சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் கல்லை போட்டு கொலை!
அதன் காரணமாக தான் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டிருக்கிறது. இது பழைய மேம்பாலம் மற்றும் புதிய மேம்பாலம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதி மிகப் பெரிதாக இருக்கும் நிலையில் இங்கிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மக்கள், பாலத்தை ஆர்வமுடன் பார்வையிட அதிக அளவு வந்ததால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே வாகனங்களில் யுடர்ன் எடுத்ததும் போக்குவரத்திற்கு நெரிசலாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஒரு வாரம் ஆய்வு செய்துவிட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.